×

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் வரும் மே 28ம் தேதி பண்ருட்டியில் மாபெரும் பலா திருவிழா

பண்ருட்டி: விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் பண்ருட்டியில் வரும் மே 28-ம் தேதி மாபெரும் பலா திருவிழா நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பல்வேறு முன்னோடி விவசாயிகள் மற்றும் வல்லுர்கள் பங்கேற்று பலாவில் இருந்து பத்து தலைமுறைக்கு லாபம் எடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளனர். இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் கூறுகையில், “மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் சுற்றுச்சூழலையும் விவசாயிகளின் பொருளாதாரத்தையும் ஒரு சேர முன்னேற்றும் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

இதற்காக, லாபகரமாக விவசாயம் செய்து வரும் முன்னோடி விவசாயிகளின் தோட்டத்திலேயே புது விவசாயிகளை அழைத்து பயிற்சி வகுப்புகளையும், கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம். அந்த வகையில் இம்மாதம் பண்ருட்டியைச் சேர்ந்த முன்னோடி பலா விவசாயியும் வேளாண் துறையின் முன்னாள் துணை இயக்குநருமான திரு. ஹரிதாஸ் அவர்களின் தோட்டத்தில் இந்த பலா திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளோம். திரு. ஹரிதாஸ் அவர்கள் ‘100 வகை பலா, 100 விதமான சுவை’ என்ற தலைப்பில் பேச உள்ளார். இந்திய உணவு பதப்படுத்துதல் நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுநர் டாக்டர் ஜெகன் மோகன், பலாவை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துவது குறித்தும், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுநர் டாக்டர் கருணாகரன், சிவப்பு பலாவின் சிறப்புகள் குறித்தும் பேச உள்ளனர்.

மேலும், முன்னோடி விவசாயி திரு.குமாரவேல், தென்னைக்குள் பலாவை நட்டு லாபம் எடுப்பது குறித்தும், முன்னோடி விவசாயி திரு. திருமலை மிளகு சாகுபடி குறித்தும், மதுரையைச் சேர்ந்த திருமதி. ஜோஸ்பின் மேரி, தேனீ வளர்ப்பு குறித்தும் ஆலோசனைகள் வழங்க உள்ளனர். இதுதவிர, கேரளாவைச் சேர்ந்த தேசிய விருது பெற்ற திரு. ஜேம்ஸ் ஜோசப் அவர்கள் ‘பச்சை பலா மாவை தினமும் உணவோடு சேர்த்து உட்கொள்வதன் மூலம் 90 நாளில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சாத்தியம்’ குறித்தும் பேச உள்ளார். மேலும், கேரளாவில் பலாவில் இருந்து தயாரித்த பொருட்களை சிறப்பாக சந்தைப்படுத்தி வரும் ‘சக்கா கூட்டம்’ என்ற குழுவினரின் பொருட்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்ட பலா உணவுப் பொருட்களின் கண்காட்சியும் இத்திருவிழாவில் இடம்பெற உள்ளது. பலாவை நட்டு லாபம் பார்க்க விரும்பும் அனைத்து விவசாயிகளும் இந்நிகச்சியில் கலந்து கொள்ளலாம். ஆர்வமுள்ள விவசாயிகள் 94425 90079 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்” என்றார்.

The post காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் வரும் மே 28ம் தேதி பண்ருட்டியில் மாபெரும் பலா திருவிழா appeared first on Dinakaran.

Tags : kaveri cry movement ,giant jack festival ,panruti ,Cauvery Cry Movement ,Pancruti ,Paniruti ,Dinakaran ,
× RELATED 17 வயது சிறுமியுடன் காதல் 19 வயது சிறுவன் மீது வழக்கு